Popular Posts

Sunday, 18 October 2026

தஞ்சையில் நிர்வாக சொதப்பலால் காரணமின்றி முடக்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீடுகள்... தவிக்கும் ஏழை மக்கள்!

 

ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் பெரும் பாதுகாப்பாக விளங்கி வந்த 'முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' (CMCHIS) பல இடங்களில் புதுப்பிக்கப்படாமலும், காப்பீட்டு அட்டைகள் முடக்கப்பட்டு உள்ளதால் விபத்து மற்றும் அவசர காலங்களில் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

திடீர் உடல்நலக்குறைவு அல்லது பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளுக்காகத் தனியார் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளை நாடும் விவசாய தொழிலாளர்களுக்கு, "உங்கள் காப்பீட்டு அட்டை செல்லுபடியாகும் நிலையில் இல்லை" அல்லது "செயலிழந்துவிட்டது" என்று கூறி சிகிச்சை மறுக்கப்படும் சம்பவங்கள் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வருகின்றன.



கடந்த 19.06.2025 அன்று பேராவூரணி வட்டம், ஊமத்தநாடு DG.L திருமண மகாலில் நடைபெற்ற 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காகப் பதிவுசெய்த 50-க்கும் மேற்பட்ட ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்களின் காப்பீட்டு அட்டைகள் திடீரென முடக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தினசரி கூலி வேலையை மட்டுமே நம்பி வாழும் ஏழை குடும்பங்கள், மருத்துவமனைகளின் இந்த பதிலால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். கட்டணமில்லா அவசர சிகிச்சை பெறுவதற்காக வழங்கப்பட்ட திட்டம், இப்போது நடைமுறையில் முடங்கி நிற்பதால் பொதுமக்கள் கடன் வாங்கி சிகிச்சை பெற வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் ஏழை விவசாய கூலி தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு நடத்தும் சிறப்பு முகாம்களிலேயே இதுபோன்று தவறுகள் நடந்திருப்பது அப்பகுதியில் தற்போது பெரும் பேசு பொருளாகி உள்ளது. 

சமீபத்தில் வாகன விபத்தில் தலை மற்றும் முகத்தில் காயமடைந்த மரக்காவலசை கிராமத்தை சேர்ந்த திரு சுப்பிரமணியன் ( வயது 42 ) விவசாய கூலி தொழிலாளி ஒருவர், அவசர சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோதுதான் இந்த உண்மை தெரியவந்துளது. அவரது குடும்ப அட்டையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் பயன்படுத்த இயலாத வகையில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

குடும்ப அட்டையில் காப்பீடு பதிவு செய்யப்படாமல் இருந்தால் உடனடியாக பதிவு செய்து சிகிச்சை பெறலாம். ஆனால், காப்பீடு பதிவு செய்யப்பட்டு முடக்கப்பட்ட நிலையில் இருக்கும் பட்சத்தில் அதனை மேல்முறையீடு செய்து அதற்கான தீர்வு எட்டப்படுவதற்கு குறைந்தபட்சம் 20 நாட்கள் ஆகும். இதனால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது.

ஒரே நாளில் ஒரே முகாமில் பதிவு செய்த குறிப்பிட்ட இந்த 50 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மட்டும் அட்டை முடக்கப்பட்டிருப்பதன் மூலம், முகாமின் போது தரவுகளைப் பதிவேற்றம் செய்ததில் (Data Entry) ஏற்பட்ட பெரும் தொழில்நுட்ப பிழை அல்லது அதிகாரிகளின் அலட்சியமே இதற்குக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



இந்த மிக முக்கியமான விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு 19.06.2025 முகாமில் பெறப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மனுக்களின் தற்போதைய நிலையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, இதற்குக் காரணமான தொழில்நுட்ப/நிர்வாகப் பிழைகளை சரிசெய்து முடக்கத்தை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காப்பீட்டு அட்டைகள் முழுமையாகச் சரிசெய்யப்படும் வரை, பாதிக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் அவசர மருத்துவச் சிகிச்சையைப் பெற சிறப்பு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் 'மக்களுடன் முதல்வர்' முகாமில் பதிவு செய்த அளித்த ஏழை விவசாயக் கூலிகளுக்குப் காப்பீட்டு பலன்கள் தடங்கலின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

No comments:

Post a Comment

தஞ்சையில் கைது நடைமுறையில் அலட்சியம் காட்டிய CBCID | கொட்டு வைத்த உயர்நீதிமன்றம்...

  "காவல் ஆய்வாளரின் கைது சட்டவிரோதம்!" - சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரி...