"காவல் ஆய்வாளரின் கைது சட்டவிரோதம்!" - சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாரன் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும், அவரை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
தஞ்சாவூரில் உள்ள "ஏ டு இசட் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை" (A to Z Speciality Hospital) கூட்டாளர்களான சரவணன் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோருக்கு இடையே எழுந்த தொழில்துறை தகராறில், திருமாரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சுகுமாரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.
இந்த விசாரணை ஒருதலைப்பட்சமாக இருப்பதாகக் கூறி, சட்டம்-ஒழுங்கு டிஜிபி உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடி-க்கு (CB-CID) மாற்றப்பட்டது. அதன் பின், தொழிலதிபர் சரவணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சுகுமாரன் கட்டப்பஞ்சாயத்து செய்து ரூ.5 கோடி பறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, சிபிசிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு:
தங்கள் கணவரின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சுகுமாரனின் மனைவி இன்னிசை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் டாக்டர் பி.முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
வழக்கு விசாரணையில் நீதிபதிகள் அரசுக்கு சரமாரியான கேள்விகளை அடுக்கி, பின்னர் கைது நடைமுறையில் காவல் துறையின் அலட்சியம் மற்றும் சட்ட நடைமுறைகளை சரியாக பின்பற்றாத காரணத்தால் காவல் ஆய்வாளர் சுகுமாறன் அவர்களின் கைது சட்ட விரோதம் என கூறி அவரை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அதற்கான காரணங்களாக நீதியரசர்கள் குறிப்பிட்டவை
- பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவு 35(3)-ன் கீழ் வழங்கப்பட்ட நோட்டீஸை ஏற்று, காவல் ஆய்வாளர் சுகுமாரன் சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜராகி ஒத்துழைத்துள்ளார். அவ்வாறு விசாரணைக்கு ஒத்துழைக்கும் ஒருவரைக் கைது செய்ய வேண்டுமானால், அதற்கான வலுவான காரணங்களை விசாரணை அதிகாரி எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், சிபிசிஐடி தரப்பில் அத்தகைய எந்தவொரு பதிவும் மேற்கொள்ளப்படவில்லை.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 22(1)-ன் படி கைது செய்யப்படும் நபருக்கு அதற்கான காரணங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால், சுகுமாரனுக்குக் கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை.
- மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கைது காரணங்கள் வழங்கப்படாதது சுட்டிக்காட்டப்பட்டபோது, "கைது செய்யப்பட்டவர் காவல் ஆய்வாளர் என்பதால் அவருக்கும், அவரது மனைவி வழக்கறிஞர் என்பதால் அவருக்கும் இதற்கான காரணம் தெரிந்திருக்கும்" எனக் கூறி நிராகரிக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளில் இதுபோன்ற சாக்குப்போக்குகளை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.









