இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு " பில்லி சூனியம் " வைத்த நபரை தேடும் உத்தரப் பிரதேச காவல் துறை :
உத்தரப் பிரதேசம்:
உத்தரப் பிரதேச மாநிலம் தோரிகாட் பகுதியில் உள்ள மயானத்திற்கு அருகே, பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி ‘பில்லி சூனியம்’ அல்லது துர்சடங்குகள் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
காவல் துறையின் கூற்றுப்படி, சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், தோரிகாட் காவல் எல்லைக்குட்பட்ட சரயு நதிக்கரையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி தேங்காய், எலுமிச்சம்பழங்கள் மற்றும் ஆரஞ்சு நிறப் பொடி உள்ளிட்ட சடங்குப் பொருட்கள் சுற்றி வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்துத் தெரியவந்ததும், அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. வீடியோ எங்கிருந்து முதன்முதலில் பதிவேற்றப்பட்டது என்பதை சைபர் செல்லின் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து வருவதுடன், சம்பவம் நடந்த இடத்திலிருந்தும் தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்.
இது குறித்து கோசி வட்டக் காவல் அதிகாரி சத்யேந்திர பூஷன் திவாரி கூறுகையில், "பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக தோரிகாட் காவல்துறை சனிக்கிழமை FIR பதிவு செய்துள்ளது" என்றார்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்வதன் மூலமும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமரின் புகைப்படத்தையும், சடங்குப் பொருட்களையும் ஆற்றங்கரையில் வைத்தது யார்? மற்றும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருவதாகக் காவல் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment